Skip to content

கால் கழுவுதல்

கால் கழுவுதல் என்றால் என்ன? இச்சடங்கானது எப்பொழுது தோற்றுவிக்கப்பட்டது?

அவர் விடைப்பெறுவதற்கு முன்பதாக அந்த மாலை பொழுதிலே, கர்த்தர் இயேசு அவர் தமது சீடர்களின் மீது வைத்திருந்த அன்பை வெளிப்படுத்த எழுந்தார். போஜனத்தை விட்டெழுந்து, வஸ்திரங்களைச் கழற்றிவைத்து, ஒரு சீலையை எடுத்து, அரையிலே கட்டிக்கொண்டு, பின்பு பாத்திரத்தில் தண்ணீரை வார்த்து, சீஷருடைய கால்களைக் கழுவவும், தாம் கட்டிக்கொண்டிருந்த சீலையினால் துடைக்கவும் தொடங்கினார். (யோ 13:3-4)

கர்த்தர் தமது வஸ்திரங்களைக் களைந்து தமது ஜனங்களுக்குச் சேவை செய்தார். படைப்பாளர் தம் உயிரினங்களுக்கு முன் தம்மை வளைந்து, அவர்களின் உடலில் மிகவும் தாழ்மையான உடல் உறுப்புகளைக் கழுவினார். இது பிரியாவிடை நிகழ்வை விட மேலானதாய் இருந்தது. அவர் ஒவ்வொருவருக்கு முன்பாகவும் மண்டியிட்டு, தம்மைக் கைவிடப்போகும் சீடரின் கால்களையும் கழுவியபோது, ஆசிரியர் தமது கடைசி, மிகப்பெரிய அன்பினைப் போதனையாகப் பிறருக்குக் கொடுத்தார்.

இயேசு அவனை நோக்கி, ‘’முழுகினவன் தன் கால்களை மாத்திரம் கழுவவேண்டியதாயிருக்கும், மற்றபடை அவன் முழுவதும் சுத்தமாயிருக்கிறான்,’’ (யோ 13:10). இந்த ஒப்புமையின் மூலம், ஒரு விசுவாசி ஞானஸ்நானம் பெற்றபின் கால் கழுவுதலை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கர்த்தர் நமக்குப் போதிக்கிறார்.

ஏன் நாம் கால் கழுவுதலை மேற்கொள்ள வேண்டும்?

இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக, ‘’நான் உன்னைக் கழுவாவிட்டால் என்னிடத்தில் உனக்குப் பங்கில்லை,’’ என்றார் (யோ 13:8). கால் கழுவுதலானது ஓர் அடையாளத்திற்காகச் செய்யப்படும் ஒரு சடங்கு அல்ல. அவருக்குள்ளாகப் பங்குக் கொள்ள நீங்கள் கீழ்ப்படிய வேண்டும் என்ற கர்த்தரின் கட்டளையாக இது இருக்கிறது. தேவனின் இரட்சிப்பு கிருபையானது ஞானஸ்நானத்தில் முடிவதில்லை. அவருடைய கிருபையானது வாழ்நாள் முழுவதும் நமக்குக் கிடைக்கும் ஒரு பரிசாக இருக்கிறது. இந்த நீடித்த உறவில் நாம் பங்கேற்க, கர்த்தரிடத்திலிருந்து வரும் இந்த கால் கழுவும் சடங்கினை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

ஞானஸ்நானத்தைப் போலதான் இந்த கால் கழுவுதலும் ஒரு சடங்கு: இரட்சிப்பின் ஆவிக்குரிய விளைவைக் கொண்டிருக்கும் ஒரு உடல் ரீதியான செயலைப் பெற இச்சடங்கினைச் செய்யுமாறு தேவன் கட்டைளையிட்டார். ஞானஸ்நானத்தின் மூலம் கர்த்தராகிய இயேசு நமது கடந்தகால பாவங்கள் அனைத்தையுமே சுத்திகரிக்கிறார். கால் கழுவுதலின்வழி, அவர் ஏற்கனவே வகுத்த பாதையிலே நடக்க நமது கால்களைத் தயார்படுத்துகிறார்: அவருடைய ராஜ்யத்திற்கு வழிவகுக்கும் நீதியின் பாதை அது.

இயேசுவின் கட்டளைகளைப் பின்பற்றுவதின்வழி, அவர் சொன்ன ஆவிக்குரிய போதனைகளையும் நாம் பெறுகிறோம். ’’நான் உங்களுக்குச் செய்ததுபோல நீங்களும் செய்யும்படி உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன். மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், ஊழியக்காரன் தன் எஜமானிலும் பெரியவனல்ல, அனுப்பப்பட்டவன் தன்னை அனுப்பினவரிலும் பெரியவனல்ல,’’ (யோ 13:15-16). எங்கள் எஜமானர் அநேக பாவிகளின் கால்களைக் கழுவியது போல், அவரைப் பின்தொடரும் நாமும் நமது அகங்காரத்தின் வெளிப்புறத்தை அகற்றி, சேவையைச் செய்ய நம்மைப் பணிவாக வளைந்து கொடுத்து, கிறிஸ்துவின் அன்பை மற்றவர்களுக்குப் பகிர்ந்து கொள்ளவும் நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம்.

கால் கழுவுதல் சடங்கினை எங்கே, எப்படி மேற்கொள்ள வேண்டும்?

கர்த்தரின் கட்டளைக்கேற்ப, இன்றைய சபை இயேசு கிறிஸ்து நாமத்தினால் ஞானஸ்நானம் பெற்றவர்களுக்குக் கால் கழுவும் சடங்கினை மேற்கொள்கிறது. இந்த சடங்கானது தேவனின் சார்பாகச் செய்யப்படுகிறது, அவருடைய நாமத்தினல் நாம் சுத்திகரிக்கப்பட்டு, இரட்சிக்கப்படுகிறோம்.

சடங்கை நடத்துபவர் ஒரு தொட்டியில் தண்ணீரை ஊற்றி, ஒவ்வொரு புதிய விசுவாசியின் கால்களையும் கழுவி, ஒரு துண்டுடன் உலர்த்துகிறார். இந்த கால் கழுவும் சடங்கினைப் பெறும்போது, கிறிஸ்துவுக்குள் ஒரு சகோதரனோ, சகோதரியோ பாதங்களைக் கழுவுகிறார்கள். ஆனால், ஆவியில் நமது கர்த்தர் தான் நமது கால்களைக் கழுவுகிறார்.

கால் கழுவுதல் கிறிஸ்துவின் மாறாத அன்பினை நினைப்பூட்டுகிறது. இயேசு தமது சீடர்களுடன் வாழ்ந்தது போல, நாமும் ஒருவருக்கொருவர் சாந்தத்திலும், பொறுமையிலும், அன்பிலும் வாழக் கற்பிக்கப்பட்டிருக்கிறோம். எனவே, சில நேரங்களில் விசுவாசிகள் அன்பையும், மன்னிப்பையும் வெளிப்படுத்தும் வகையில் ஒருவருக்கொருவரின் கால்களைக் கழுவுவார்கள்.

கால் கழுவுதலைப் பெற்ற பிறகு என்ன நடக்கும்?

i. உங்கள் கால்களைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

உங்கள் கால்கள்-நீங்கள் நடக்கத் தேர்ந்தெடுக்கும் ‘’நடை’’- உங்கள் நடத்தையையும் வாழ்க்கை முறையையும் காட்டுகிறது. கால் கழுவுதல் என்பது கிறிஸ்து உங்கள் வாழ்க்கையின் ஆண்டவராக இருக்க அனுமதிப்பதும், அவரின் அடிச்சுவடுகளில் நடக்க உங்களை ஒப்புக்கொடுப்பதும் ஆகும். சமுதாயத்திலுள்ள பாவத்தின் தாக்கங்களை நிராகரிக்கவே தேவன் நம்மை அழைக்கிறார். நான் தினமும் அவருடன் நடக்கவும், நமது வார்த்தையிலும், செயலிலும் அவரின் முன்மாதிரிகளைப் பின்பற்றவும் அவர் விரும்புகிறார்.

ii. அவருடைய தேவாலயத்தில் உங்கள் கால்களை வைத்துக் கொள்ளுங்கள்.

இயேசு கிறிஸ்துவுடன் அவருடைய சரீரமான சபையின் அங்கங்களாக நமக்கு ஒரு பங்கு இருக்கிறது. ’’கர்த்தருடைய ஆலயத்திற்குப் போவோம் வாருங்கள் என்று எனக்கு அவர்கள் சொன்னபோது மகிழ்ச்சியாயிருந்தேன். எருசலேமே, உன் வாசல்களில் எங்கள் கால்கள் நிற்கலாயிற்று,’’ என்று இஸ்ரவேலர்களின் ராஜாவான தாவீது பாடினார் (சங் 122:1-2).

iii. கிறிஸ்துவின் அன்பிலே நடப்போம்.

இயேசு தமது சீடர்களோடு உண்ட இறுதி போஜனத்தில், அவர் அவர்களுக்கு விட்டுச் சென்ற வார்த்தைகள்: ‘’நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்; நான் உங்களில் அன்பாயிருந்ததுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள் என்கிற புதிதான கட்டளையை உங்களுக்குக் கொடுக்கிறேன். நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீடர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள்,’’ என்றார். நாம் கால் கழுவுதலைப் பெறும்போது, கர்த்தரின் அன்பினை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள அவரின் அழைப்புதலைப் பெற்றிருக்கிறோம்.

உண்மையான அன்பு என்பது வெறும் உணர்வு அல்லது தத்துவம் அல்ல. அதை நமது செயல்களின் மூலம் வெளிப்படுத்துகிறோம். நாம் அவருடைய எதிரிகளாக இருந்தபோதே இயேசு கிறிஸ்து நமக்காகத் தம் உயிரைக் கொடுத்திருக்கிறார். நமது கால்கள் கழுவப்படுவதன் மூலம், நாம் நமது அண்டை வீட்டாரையும் எதிரிகளையும் அதே அளவில் நேசிக்கும்படி அவர் நம்மை அனுப்பியிருக்கிறார். ‘’நீங்கள் இவைகளை அறிந்திருக்கிறபடியினால், இவைகளைச் செய்வீர்களானால், பாக்கியவான்களாயிருப்பீர்கள்,’’ என்று இயேசு சொன்னார் (யோ 13:17). நமது கால் தடங்கள் உலகில் கர்த்தரின் அன்பின் தடங்களாக இருக்கட்டும்.