Skip to content

பரிசுத்த ஆவி

ஏன் நான் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்ளவது அவசியம்?

இன்றைய சமூகத்தில் வாழ்வது அவ்வளவு எளிதல்ல. நாம் இயேசுவின் இரத்தத்தால் கழுவப்பட்டிருந்தாலும், நாம் நம்மை எவ்வாறு பரிசுத்தமாக வைத்திருக்க போகிறோம்? இந்த உலகமானது அநேக தவறுகள், வக்கிரங்கள், தவறான கருத்துகள் போன்றவற்றால் நிறைந்திருக்கிறது. மனிதர்கள் தங்களின் சுய இச்சைகளினால் நகர்த்தப்படுகின்றார்கள். நம்மைச் சுற்றியிருப்பவர்கள் நமக்கு எதிராகச் செல்லும்போது, கிறிஸ்துவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுவது மிகவும் சவாலான ஒன்று.

நீங்கள் எதிர்கொள்ளவிருக்கும் சவால்களை அவர் அறிந்திருக்கிறார். நம்மை தேற்றுவதற்காக அவர் இந்த பூமியை விட்டு செல்வதற்கு முன் தம்மைப் பின்பற்றுகிறவர்களுக்கு ஒரு வாக்குறுதியை அளித்தார்.

— யோவான் 15:18-19

“உலகம் உங்களைப் பகைத்தால், அது உங்களைப் பகைக்கிறதற்கு முன்னே என்னைப் பகைத்ததென்று அறியுங்கள். நீங்கள் உலகத்தாராயிருந்தால், உலகம் தன்னுடையதைச் சிநேகித்திருக்கும்; நீங்கள் உலகத்தாராயிராதபடியினாலும் நான் உங்களை உலகத்திலிருந்து தெரிந்துகொண்டபடியினாலும், உலகம் உங்களைப் பகைக்கிறது.”

யோவான் 15:18-19

அவருடைய நாமத்தினிமித்தம் நாம் சந்திக்கும் பாடுகளையும் துன்பங்களையும் அவர் அறிந்திருக்கிறார். தம்முடைய வல்லமையை நிலைத்திறுக்கச் செய்வது நமக்கு முக்கியம் என்பதையும் அவர் அறிந்திருந்தார்.

“நான் உங்களுடனே தங்கியிருக்கையில் இவைகளை உங்களுக்குச் சொன்னேன். என் நாமத்தினாலே பிதா அனுப்பப்போகிற பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனே எல்லாவற்றையும் உங்களுக்குப் போதித்து, நான் உங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் உங்களுக்கு நினைப்பூட்டுவார். சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலுமிருப்பதாக. ” (யோவான் 14:25-27)

பரிசுத்த ஆவியானவர், சத்திய ஆவியானவர், நம்முடைய வரையறுக்கப்பட்ட புரிதலைத் திறக்கிறார், அதனால் நாம் கடவுளின் விருப்பத்தையும் வழிகளையும் புரிந்து கொள்ள முடிந்தது. (1 கொ 2:11) மாம்சத்தின் சோதனைகளை நாம் முறியடித்து, பலனளிக்கும் வாழ்க்கையை வாழ அவர் நம் வாழ்க்கையை மாற்றியமைக்கிறார். (ரோமர் 8:13) பரிசுத்த ஆவியானவர் நம்மை தேவனுடைய பரிசுத்த ஜனங்களாகப் பிரித்தெடுத்து, நாம் தேவனுடைய பரலோக ராஜ்யத்தில் பிரவேசிக்கும் நாள்வரை நம்மைப் பரிசுத்தப்படுத்தி, முத்திரையிடுகிறார். (1 கொ 6:11; 2 தெச 2:13; எபே 1:13-14)

பரிசுத்த ஆவி என்றால் என்ன?

தம்மை விசுவாசிக்கின்றவர்களுக்குள் வாசம் செய்ய அவர்களின்மீது பரிசுத்த ஆவியைப் பொழிய செய்வார் என்று தேவன் தீர்க்கதரிசிகளின் மூலம் வாக்குத்தத்தம் செய்திருக்கிறார். உங்கள் உள்ளத்திலே என் ஆவியை வைத்து, உங்களை என் கட்டளைகளில் நடக்கவும் என் நியாயங்களைக் கைக்கொள்ளவும் அவைகளின்படி செய்யவும்பண்ணுவேன். (எசேக்கியேல் 36:27)

தேவன் ஆவியாயிருக்கிறார்’’ என்று வேதாகமம் நமக்குச் சொல்லுகிறது. (யோவான் 4:24). ‘’கர்த்தரே ஆவியானவர்’’ என்றும் வேதாகமம் நமக்குச் சொல்லுகிறது. (2 கொரிந்தியர் 3:17). கர்த்தரின் ஆவி இயேசு கிறிஸ்துவின் ஆவியாக இருக்கிறது; அவரே பரிசுத்த ஆவியானவர்.

பரிசுத்த ஆவியின் மூலம்

  • தேவன் பிரபஞ்சத்தைப் படைத்தார்.
  • தமது ஊழியக்காரர்களை அபிஷேகம் செய்தார்.
  • தீர்க்கத்தரிசிகளின் மூலம் பேசினார்.
  • கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைக் கருத்தரித்தார்.
  • இயேசுவை அபிஷேகம் செய்து அவர்தான் கிறிஸ்து என்று வெளிப்படுத்தினார்.
  • கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கவும், அறிக்கை செய்யவும் துலங்கினார்.
  • நாம் தேவனுக்கு முன்பாக வரும்படிக்கு நம்முடைய பாவங்களை நமக்கு
    உணர்த்துவார்.
  • கர்த்தரின் பிரசன்னத்தை உறுதி செய்வார்.

இயேசு பரிசுத்த ஆவியை, ’’தேற்றவாளர்’’, ’’ஆலோசகர்’’, ‘’ஆறுதல் செய்கின்றவர்’ என்று அழைக்கிறார். நம்முடைய பரலோக இராஜியத்தை நோக்கி மேற்கொள்ளும் யாத்திரையில் ஒரு வழிகாட்டியாக அவர் எல்லா நேரங்களிலும் நம்மோடு இருக்கிறார். தேவனின் வார்த்தைகளின்படி நாம் வாழும் வரையிலும் அவர் எப்போதும் நம்மோடே இருப்பார். சத்தியத்தைப் புரிந்துகொண்டு கர்த்தரின் வழிகளில் நடக்கவும் அவர் நமக்குக் கற்றுக்கொடுத்திருக்கிறார். நம்முடைய பலவீனத்தில் ஆவியானவர் நம்மைப் பெலப்படுத்தி, ஜெபிக்க உதவுகிறார், ‘’தேவனுடைய சித்தத்தின்படி பரிசுத்தவான்களுக்காகவும் பரிந்து பேசுகிறார்’’. (ரோமர் 8:26-27)

முழுக்கு ஞானஸ்நானத்தின் வழி நாம் பெற்ற சுத்திகரிப்பானது நமது பயணத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது. பரிசுத்தமாக்குதலானது கர்த்தர் வாழ்நாள் முழுவதும் தம்முடைய விசுவாசிகளின் மீது செய்யும் ஒரு தொடர் வேலையாகும். நம்முடைய மன உறுதியினால் மட்டும் நம்முடைய பாவ சுபாவத்தையும் பிசாசின் சோதனைகளையும் நாம் வெல்ல முடியாது. பரிசுத்த ஆவியான தேவனுடைய ஆவி நம்மில் நிலைத்திருந்து, கிறிஸ்துவின் பரிபூரணமான முன்மாதிரியாக அவரின் பிள்ளைகள் உருமாறி வாழ்வதற்கான பெலனை கொடுத்திருக்கிறார்.

“அவர் நம்மில் நிலைத்திருக்கிறதை அவர் நமக்குத் தந்தருளின ஆவியினாலே அறிந்திருக்கிறோம். “(யோவான் 3:24)

எப்படி நாம் பரிசுத்த ஆவியைப் பெறுவது?

i. மாற்றப்பட வேண்டும்.

பரிசுத்த ஆவியைப் பெற, நீங்கள் கர்த்தராகிய இயேசுவை உங்கள் இரட்சகராக விசுவாசித்து, உங்கள் பாவங்களுக்காக மனத்தாழ்மையுடன் மனந்திரும்பி, கிறிஸ்துவுக்குள் ஞானஸ்நானம் பெற வேண்டும். ஞானஸ்நானம் பரிசுத்த ஆவியின் வாக்குறுதியுடன் கைகோர்த்து செல்கிறது:

“நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்.” (அப்போஸ் 2:38)

ii. சத்தியத்திற்குக் கீழ்ப்படிய வேண்டும்.

தமக்குக் கீழ்ப்படிகிறவர்களுக்குத்’’ தேவன் பரிசுத்த ஆவியைத் தந்தருளினார் (அப்போஸ் 5:32). பரிசுத்த ஆவியானவர் சத்திய ஆவியாக இருப்பதால், பரிசுத்த ஆவியைப் பெறுவதற்கு நீங்கள் உண்மையான சுவிசேஷத்தைப் படித்து அதற்குக் கீழ்ப்படிய வேண்டும்.

iii. விசுவாசத்துடன் ஜெபிக்க வேண்டும்.

பரம பிதாவானவர் தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்குப் பரிசுத்த ஆவியைக் கொடுப்பது அதிக நிச்சயம்’’ என்று இயேசு தமது சீடர்களிடம் கூறினார் (லூக்கா 11:13). நாம் ஜெபத்தின் மூலமாக தேவனிடம் பரிசுத்த ஆவியைக் கேட்கிறோம். கர்த்தரின் வாக்குத்தத்தத்தில் நம்பிக்கை கொண்டு, விடாப்பிடியான ஜெபத்தினாலும், தீவிர ஏக்கத்தினாலும், கர்த்தர் வாக்களித்தபடி பரிசுத்த ஆவியைப் பெறுவீர்கள்.

iv. கர்த்தரின் வல்லமையை அனுபவித்தல்.

பெந்தெகொஸ்தே நாளின்போது கர்த்தர் பரிசுத்த ஆவியை முதன்முறையாகப் பொழிந்தார் (அப்போ 2), விசுவாசிகள் பரிசுத்த ஆவியைப் பெற்று நாவில் பேச தொடங்கினர். பரிசுத்த ஆவியைப் பெறுவது கேட்கக்கூடிய, அடிக்கடி காணக்கூடிய ஓர் அனுபவமாக விளங்குகிறது. இது அந்நியபாஷைகளில் பேசும் அடையாளத்தால் கேட்கக்கூடியது. இது பெரும்பாலும் உடல் அசைவினாலும் தெரியும். இயேசுவின் சீடர்களும் அங்கிருந்த பார்வையாளர்களும் பரிசுத்த ஆவியின் பொழிதலைக் ‘கேட்கவும், பார்க்கவும்’ முடிந்ததாக் கூறினர் (அப்போ 2:33; 10:45-47).

பரிசுத்த ஆவி நம்மீது இறங்கும்போது, வேத வசனங்களில் சொல்வதுபோல, நாம் அந்நியபாஷைகளில் பேச தூண்டப்படுவோம். அதோடு, மேலேயிருந்து அரவணைப்பையும் வல்லமையையும் அனுபவிக்க முடியும். பரிசுத்த ஆவி கர்த்தரிடமிருந்து வருகிறது; இருந்தாலும் அந்த அனுபவமானது பயமுறுத்தும் வகையில் அல்லாமலும், கட்டுப்பாட்டையும் உணர்வையும் இழக்கின்ற வகையிலும் அமையாது. நம்மால் விழிப்புடன் இருந்து நமது ஜெபத்தை எந்நேரமும் முடிக்க முடியும்.

நமக்குள்ளாகப் பரிசுத்த ஆவி வாசம் செய்வதை நான் எப்படி அறியலாம்?

— ரோமர் 8:9

“தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், நீங்கள் மாம்சத்துக்குட்பட்டவர்களாயிராமல் ஆவிக்குட்பட்டவர்களாயிருப்பீர்கள். கிறிஸ்துவின் ஆவியில்லாதவன் அவருடையவனல்ல”

ரோமர் 8:9

பரிசுத்த ஆவி நமக்குள்ளாக வாசம் செய்தால், நாம் அந்நியபாஷையில் ஜெபிப்போம். அந்நியபாஷைகளில் பேசும் அனுபவமானது ஒரு முறை மட்டுமே கிடைக்கும் ஓர் அனுபவம் கிடையாது. நாம் அந்நியபாஷைகளில் ஜெபிக்கும்போது, ‘’நாம் ஏற்றபடி வேண்டிக்கொள்ளவேண்டியதின்னதென்று அறியாமலிருக்கிறபடியால், ஆவியானவர் தாமே வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல் செய்கிறார்’’ (ரோமர் 8:26). சில நேரங்களில் நமது ஆழமான வலிகளை நம்மால் வெறும் வார்த்தைகளில் வெளிப்படுத்த முடியாது, தேவனுக்குப் போற்றுதலை வெளிப்படுத்தும் வகையில் ‘நன்றி’ கூறவும் சில நேரங்களில் நம்மால் முடியாது. ஆனால், பரிசுத்த ஆவி உலக வார்த்தைகளுக்குப் பதிலாக அந்நியபாஷைகளில் நமக்காக ஜெபம் செய்ய உதவும். ஆவியில் ஜெபிப்பது நமக்கு அதிக திருப்தியினைக் கொடுக்கும். ஏனென்றால், பரிசுத்த ஆவியானது தேவனின் சித்தத்தையும் சத்தியத்தையும் அறிய உதவுகிறது. அவர் நமது தேவைகளை மனிதர்களின் மொழிகளை விட திறம்பட வெளிப்படுத்துவார்.

பரிசுத்த ஆவி நம்மை நிரப்பும்போது, நம்மால் கர்த்தரின் இயல்பை வெளிப்படுத்த முடியும். வேதாகமம் நமக்கு, ‘’ஆவியின் கனியோ அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்’’ குறித்துப் போதிக்கிறது (கலாத் 5:22-23). இயேசு, ‘’ நீங்கள் மிகுந்த கனிகளைக் கொடுப்பதினால் என் பிதா மகிமைப்படுவார், எனக்கும் சீஷராயிருப்பீர்கள்’’ என்று கூறினார் (யோ 15:8).

ஆகையால் உங்களுக்குச் சொல்லிக்கொள்கிறேன், ஆவிக்கு ஏற்றபடி நடந்துகொள்ளுங்கள். பிறகு நீங்கள் மாம்ச இச்சையை நிறைவேற்றமாட்டீர்கள் (கலா 5:16). இப்படி செய்வதினால், நம்மால் சமாதானம், சந்தோஷம், அன்பு தொடர்ந்து நமக்குள்ளாகப் பாயும். கர்த்தர் இயேசு, ‘’நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கோ ஒருக்காலும் தாகமுண்டாகாது, நான் அவனுக்குக் கொடுக்கும் தண்ணீர் அவனுக்குள்ளே நித்தியஜீவகாலமாய் ஊறுகிற நீருற்றாயிருக்கும்’’, என்கிறார் (யோ 4:14). நமக்குள்ளாகப் பரிசுத்த ஆவியின் நிரப்புதலின்மூலம், நமது இருதயம் திருப்தியடைந்து, மீண்டுமாகத் தாகமடையாமல் இருக்கும்.